ஹிந்து முன்னணி நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., கணேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர், 48; இந்து முன்னணி பேரியக்கத்தில், கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார்.நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, தனக்கு சொந்தமான, 'மகேந்திரா பொலிரோ' காரில் குடும்பத்தினருடன், சீனிவாசநல்லுாரில் உள்ள பெரியகாண்டி அம்மன் கோவிலுக்கு சென்றார்.அங்கு வழிபாடு முடிந்து, கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, குளித்தலை பரிசல் துறை மேம்பாலம் அருகே திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் கல் வீசி முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதனால், காரில் இருந்த மனைவி மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜசேகர், மாவட்ட பொறுப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட, பத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள், குளித்தலை போலீசில் புகாரளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.