மக்காச்சோள சாகுபடி பயிற்சி
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி வட்டாரம், வேளாண்மை துறையின், 'ஆத்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் சாகுபடி குறித்த பயிற்சி, கொடையூர் கருவேடம்பட்டி கிராமத்தில் நடந்தது. இப்பயிற்சியில், அரவக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா முன்னிலை வகித்து, விவசாயிகளுக்கு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்க உரை அளித்தார். தொடர்ந்து, வேளாண்மை அலுவலர் கவுதமி, மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழு சேதத்தின் அறிகுறி, பூச்சியை அடையாளம் காணுதல், கடைசி உழவின் போது ஒரு ஹெக்டேருக்கு, 250 கிலோ என்ற அளவில் வேப்பம் புண்ணாக்கு இடுவது, கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளித்தார். கோவை வேளாண் பல்கலை பேராசிரியர் கார்த்திகேயன், மக்காச்சோளத்தில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறித்து விளக்கமளித்தார்.இப்பயிற்சியில், துவரை மற்றும் நிலக்கடலை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய, விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் இதர பாதிப்புகளில் இருந்து வாழ்வாதாரத்தையும், பொருளாதார இழப்பையும் பாதுகாக்க, பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறுமாறு விவசாயிகளிடையே கேட்டுகொள்ளப்பட்டது.இப்பயிற்சியில், 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர். பயிற்சியின் இறுதியில், விவசாயிகளுக்கு ஏற்பட்ட தென்னை, வெங்காய பயிர்களில் தாக்கும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.