மாயனுார் காவிரி ஆற்றின் உபரி நீரை பஞ்சப்பட்டி ஏரியில் நிரப்ப கோரிக்கை
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பஞ்சப்பட்டி ஏரி, தமிழகத்தில் உள்ள மூன்றாவது மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரி, 15 ஆண்டுகளாக தண்ணீரின்றி முட்புதர் மண்டி காணப்படுகிறது. இந்த ஏரி, பொதுப்பணித்துறை அரியாறு பாசன பிரிவு உதவிப்பொறியாளர் மற்றும் துறையினர் கண்காணிப்பில் உள்ளது. இந்நிலையில் இந்த ஏரியை, நேற்று முன்தினம் மாலை, காவிரி - குண்டாறு நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் அர்ஜூனன் தலைமையில், 15க்கும் மேற்பட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் பார்வையிட்டனர்.தொடர்ந்து, மாநில பொதுச்செயலாளர் அர்ஜூனன் கூறியதாவது:இப்பகுதி புவியியல் அடிப்படையில், மேட்டுப்பாங்கான பகுதி என அறிவிக்கப்பட்டு, பயன்பெறும் திட்டத்தில் இதை சேர்க்க மறுத்துள்ளனர். பல்வேறு இடங்களில், குறிப்பாக சேலம் மேட்டூர் அணை அருகே, சரபங்கா திட்டம் என்ற பெயரில், 565 கோடி ரூபாயில் உபரி நீரை, 5 நீரேற்று நிலையங்கள் மூலம், 100 ஏரிகளுக்கு கொண்டு செல்லும்போது, அதைவிட இது ஒரு பெரிய திட்டம் அல்ல சிறியது தான். மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர், வீணாக கடலில் கலக்கிறது. அதை நீரேற்று திட்டம் மூலம் பம்பிங் செய்து, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை யூனியன் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு சென்று நிரப்ப வேண்டும்.ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம் என்பது, 5 மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த மாவட்டங்களில் மிகப்பெரிய ஏரி பஞ்சப்பட்டி ஏரியாகும். அப்படிப்பட்ட ஏரி கடந்த, 15 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயம் பொய்த்து விவசாய நிலங்கள் மானாவாரியாக காட்சியளிக்கிறது. இந்த ஏரிக்கு மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து உபரி நீரை நீரேற்று நிலையங்கள் மூலம் பம்பிங் செய்து பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பஞ்சப்பட்டி ஏரியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை நேரில் பார்வையிட்டுள்ளார். அவருக்கு இந்த ஏரியை பற்றி நன்கு தெரியும். எனவே, ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பஞ்சப்பட்டி ஏரிக்கு உபரி நீரை கொண்டுவரும் சிறப்பு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும், ஒட்டுமொத்த காவிரி - வைகை - குண்டாறு திட்டத்துடன் பகுதி திட்டமாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாநில துணைத்தலைவர் முருகேசன், கூட்டமைப்பு கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.