நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின் விளக்கு இன்றி தவிப்பு
கரூர்:நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.கரூர் - ஈரோடு சாலையில் கடந்த, 1955ல், நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. அதை, அப்போது அமைச்சராக இருந்த, முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் திறந்து வைத்தார். முக்கியத்துவம் வாய்ந்த, நொய்யல் ஆற்றின் மேலே கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்கின்றன.கடந்த, 71 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் இதுவரை மின் விளக்குகள் போடப்படவில்லை. இதனால், அவ்வழியாக செல்வோர் இரவு நேரத்தில் சிரமப்படுகின்றனர். பாலத்தின் மேல் பகுதியில் மின் விளக்கு இல்லாததால், பாலத்தின் அடியில் செல்லும் ஆற்றுப்பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நாள்தோறும் நடந்து வருகிறது. எனவே, நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின்கம்பங்கள் அமைத்து, விளக்குகளை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.