100 நாள் வேலை திட்டத்தில் பணி இல்லாததால் மக்கள் தவிப்பு
கரூர்: குப்பம் பகுதியில், இரண்டு மாதமாக, 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்காததால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில், 30 பஞ்சாயத்துகளில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 17,695 பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். அதில், ஒவ்வொரு பஞ்.,க்கும் நுாற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் குளம், பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளில் இரபாலரும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு வாரந்தோறும் சம்பள தொகை கணக்கிடப்பட்டு தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்ததால் தொழிலாளர்கள் கூலியை பெற்று வந்தனர். இதில், குப்பம் பஞ்., 882 பேர், தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, இரண்டு மாதமாக பணி வழங்கப்படவில்லை.இதனால் பலரும் போதிய வருவாய் இல்லாமல் வறுமையில் தவித்து வருகின்றனர். தினசரி, 100 நாள் பணி கேட்டு குப்பம் பஞ்., அலுவலகத்திற்கு வந்து விட்டு பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். இப்பகுதி வானம் பார்த்த பூமி என்பதால், 100 நாள் வேலை உறுதி திட்ட சம்பளத்தை நம்பியே உள்ளனர். வருமானம் இல்லாத காரணத்தால், அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடனே பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் னெ, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.