பாதாள சாக்கடை பராமரிப்பு பகுதியில் சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
கரூர், கரூரில், பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகள் நடந்த இடத்தில், தார்ச்சாலை அமைக்காததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சி, பழைய கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்படும் போது, அதை சரி செய்ய வசதியாக, வட்ட வடிவில் மேல் பகுதிகளில், துவாரம் விடப்பட்டு, சிமென்ட் மூடிகள் போடப்பட்டுள்ளன.இந்நிலையில், மாநகராட்சியில் பல முக்கிய சாலைகளில், பாதாள சாக்கடை மேல் பகுதியில் போடப்பட்டுள்ள சிமென்ட் மூடிகள் சேதமடைந்துள்ளது. பல இடங்களில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது. ஆனால், பசுபதீஸ்வரா பள்ளி பகுதியில் தார்ச்சாலை போடவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை வழியாக, பொதுமக்கள் பல பகுதிகளுக்கு வாகனத்தில் செல்கின்றனர். எனவே, பாதாள சாக்கடை மூடிகள் பராமரிப்பு நிறைவு பெற்ற நிலையில், உடனடியாக தார்ச்சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.