5 மாத குழந்தை இறப்பு போலீசார் வழக்கு பதிவு
ஈரோடு, பெருமுகை புதுார் கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன், 24. அத்தாணி வரப்பாளையத்தில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவர் மனைவி இலக்கியா. இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த மே, 19ல் கவிநயா, காருண்யா என இரட்டை குழந்தை பிறந்தது. இலக்கியா தனது சொந்த ஊரான கணபதிபாளையம் ராம்நகரில், இரண்டு குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்தார். இரு தினங்களுக்கு முன் கோகுல கிருஷ்ணன், மனைவி குழந்தைகளை பார்க்க ராம் நகர் சென்றிருந்தார்.தாய்ப்பால் குறைவாக இருந்ததால் கடந்த, 16 இரவு பால் பவுடரில் சுடுநீர் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தொட்டிலில் குழந்தைகளை போட்டு துாங்க வைத்தார். மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு காருண்யாவின் அழுகை சத்தம் கேட்டு எழுந்து இலக்கியா பால் கொடுத்தார். மூத்த குழந்தை சத்தமின்றி மூக்கில் பால் வந்தவாறு, தொட்டிலில் துாங்கிய நிலையில் அசைவின்றி இருந்தது. பின்னர், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கவிநயாவை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.