கரூர் மாவட்டத்தில் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கரூர், டிச. 13-கரூரில் பெய்த, தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அரியலுார், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்பட 10 மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் நேற்று விடுக்கப்பட்டது.கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கரூர் மாநகராட்சி பகுதியில், இடைவிடாமல் மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இன்றி, கடை வீதி, முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மழை காரணமாக கல்லுாரி, அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு பயணிகள் பெரும்பாலானோர், குடையுடன் வந்தனர். கரூரில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு, பாதிக்கும் மேற்பட்டோர் வேலைக்கு வரவில்லை.* அரவக்குறிச்சியில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை தொடர்ந்து மழை பெய்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அலுவலகம், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். கடைவீதி, உணவகங்கள், பேக்கரி, டீக்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அரவக்குறிச்சியில், நேற்று சந்தை வெறிச்சோடி காணப்பட்டதால் வியாபாரிகள் விற்பனையின்றி வேதனை அடைந்தனர்.பள்ளிகளுக்கு விடுமுறைகரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் நகரின் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.நேற்று முன்தினம் முதல், நேற்று காலை, 8:00 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் மி.மீ.,) கரூர், 4 மி.மீ., அரவக்குறிச்சி, 1.20, அணைப்பாளையம், 2, குளித்தலை, 9.6, தோகைமலை, 23.20, கிருஷ்ணராயபுரம், 8.40, மாயனுார், 7, பஞ்சப்பட்டி, 10.40, பாலவிடுதி, 6, கடவூர், 6, மயிலம்பட்டி, 8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில், 83.80 மி.மீ., மழை பதிவானது. சராசரி மழை அளவு, 6.80 மி.மீ.,* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரராக்கியம், கட்டளை, ரெங்கநாதபுரம், ஆர்.புதுக்கோட்டை, மணவாசி, மாயனுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, பிள்ள பாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், சரவணபுரம், பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், வாழை, வெற்றிலை, பயிர்கள் பசுமையாக வளர்ச்சி அடைந்து வருகிறது.