அரவக்குறிச்சியில் பயனற்று காணப்படும் மாணவர் விடுதி
அரவக்குறிச்சி :அரவக்குறிச்சியில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக கட்டப்பட்ட சமூக நீதி மாணவர் விடுதி பயனற்று கிடக்கிறது.அரவக்குறிச்சி பகுதியில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, 1999ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கட்டப்பட்ட மாணவர் விடுதி, தற்போது பூட்டப்பட்டு கிடப்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். அன்றைய கரூர் மாவட்ட கலெக்டர் சோ.ஐயர், ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக இருந்த செல்வராஜ் தலைமையில் திறக்கப்பட்ட இவ்விடுதி, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 100 மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன் இயங்கி வந்தது.அப்போதைய காலகட்டத்தில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் விடுதியில் தங்கி மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது மாணவர் வருகை தொடர்ந்து குறைந்து வருவதால், இந்த ஆண்டு மே மாதம் வரை, 7 மாணவர்கள் மட்டுமே தங்கி வந்தனர். தற்போது, யாரும் தங்காத நிலையில், இவ்விடுதி பயன்பாடின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.இதனால், அரசு நிதியில் கட்டப்பட்ட விடுதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அரவக்குறிச்சி பகுதியில் தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வரும் நிலையில், கல்லுாரி மாணவர்களுக்காக இவ்விடுதியை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், ஏராளமான மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என, கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.விடுதியை உடனடியாக பராமரித்து, மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.