கவர்னரை புறக்கணித்த மாணவி பட்டத்தை ரத்து செய்யணும்
அரவக்குறிச்சி:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில், நேற்று ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் அளித்த பேட்டி: ஹிந்து சமயத்தையும், ஹிந்து கடவுள்களான ஆண்டாள் மற்றும் ஸ்ரீ ராமரை தொடர்ந்து அவமானப்படுத்தும் வகையில் பேசி வருகிறார் கவிஞர் வைரமுத்து. பொய் தகவல்களை தமிழ் சமூகத்தில் பரப்பி வரும் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில், ஆடு கோழி பழியிடலாம் என தமிழக அரசுத் துறைகள் கோர்ட்டில் வாதம் புரிந்துள்ளன. இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் பொய்யான தகவலை கூறி உள்ளனர். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தி.மு.க.,வை சேர்ந்த மாணவி ஒருவர், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்து, அவர் கையால் பட்டம் வாங்காமல், மேடை நாகரிகமின்றி நடந்திருக்கிறார். இப்படி மேடை நாகரிகமின்றி நடந்து கொண்ட அந்த மாணவியின், பட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த அரசியலை, தி.மு.க.,வினரைத் தவிர, வேறு யாரும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.