உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் திடீர் ரத்து சிறுவர், சிறுமியர் பசியால் தவிப்பு; பெற்றோர் வாக்குவாதம்

அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் திடீர் ரத்து சிறுவர், சிறுமியர் பசியால் தவிப்பு; பெற்றோர் வாக்குவாதம்

ப.வேலுார், நாமக்கல் மாவட்டத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்துவதாக அறிவித்துவிட்டு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், சிறுவர், சிறுமியர் பசியால் தவித்தனர். இதையறிந்த பெற்றோர், ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 'முதல்வரின் காலை உணவு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காமராஜர் பிறந்தநாளையொட்டி, மூன்றாம் கட்டமாக, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், மூன்று அரசு உதவிபெறும் பள்ளி; பள்ளிப்பாளையத்தில், ஒரு பள்ளி; ப.வேலுாரில், ஒரு பள்ளி என, மொத்தம், ஐந்து பள்ளிகளில், நேற்று காலை முதல், 'காலை சிற்றுண்டி' வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, ப.வேலுார் கந்தசாமிகண்டர் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளியில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை, 92 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு, நேற்று காலை முதல், சிற்றுண்டி வழங்குவதாக, ஆசிரியர்கள் மூலம் முதல் நாளே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், நேற்று காலையில் மாணவ, மாணவியர் உணவருந்தாமல், ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர். ஆனால், காலை, 8:00 மணி ஆகியும் சிற்றுண்டி வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மாணவ, மாணவியர் ஆசிரியர்களிடம் கேட்டுள்ளனர்.அப்போது, 'இன்று சிற்றுண்டி வழங்க இயலாது' என, தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோருக்கும் தெரிவித்துள்ளனர். இதனால், 'குழந்தைகள் பசியால் தவிக்குமே' என, பதறிபோன பெற்றோர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நிலைமையை சமாளிக்க, காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்., சார்பில் கொடுத்த இனிப்பு மற்றும் பிஸ்கட்டுகளை, மாணவர்களுக்கு கொடுத்து பசியை போக்கியுள்ளனர்.இதுகுறித்து, பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, 'இன்று (நேற்று) காலை சிற்றுண்டி வழங்குவதாக, நாமக்கல் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேற்று(நேற்று முன்தினம்) தெரிவித்ததால், பள்ளி குழந்தைகள் காலையில் சிற்றுண்டி சாப்பிட, 8:00 மணிக்கே வரவேண்டுமென அறிவுறுத்தினோம். குழந்தைகளும் சிற்றுண்டி சாப்பிட ஆவலாக வந்திருந்தனர். ஆனால், உணவு வராததால் ஏமாற்றமடைந்தனர். அவர்களுக்கு தற்காலிகமாக பிஸ்கட், இனிப்பு வகைகளை கொடுத்து சமாளித்தோம்' என்றனர். பரமத்தி ஒன்றிய, வட்டார கல்வி அலுவலர் வினோத்திடம் கேட்டபோது, ''நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஆரம்ப பள்ளிகளுக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், ப.வேலுார், பள்ளிப்பாளையம், சேந்தமங்கலத்தில் உள்ள அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளுக்கும் சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று(நேற்று) தொடங்கப்படவில்லை. இதுகுறித்து மேற்கொண்டு எனக்கு எதுவும் தெரியாது. உயர் அதிகாரிகளிடம் கேட்டு கூறுகிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை