வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு
கரூர் ;மழை காரணமாக தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால், வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை திடீரென குறைந்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி செடிகளில் சாகுபடி அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்து தக்காளி விலை படிப்படியாக குறைந்து வருகிறது.இதுகுறித்து கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: தொடர் மழையால் தக்காளி சாகுபடி அதிகரித்து, வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால், தென் மாவட்டங்களின் முக்கிய சந்தையாக உள்ள திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், அய்யலுார் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கரூர் மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால், தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளது.இதனால், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு அதிகளவில் தக்காளி கொண்டு வரப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் கடந்த மாதம், 40 ரூபாய் வரை விற்ற, ஒரு கிலோ பெரிய ரக தக்காளி தற்போது, 22 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. சிறிய அளவிலான தக்காளி, 30 ரூபாயில் இருந்து, 20 ரூபாயாக குறைந்துள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.