உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் 101 ஆண்டுகள் பழமையான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

கரூரில் 101 ஆண்டுகள் பழமையான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

கரூர், கரூரில், 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த, உயர்மட்ட பாலத்தில் துாண்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகர பகுதியில் இருந்து திருமாநிலையூர், தான்தோன்றிமலை, ராயனுார், வெள்ளியணை, கோடங்கிப்பட்டி, செல்லாண்டிப்பாளையம் பகுதிகளுக்கு செல்ல, 100 ஆண்டுகளுக்கு முன், அமராவதி ஆற்றை கடக்க பொதுமக்கள் பரிசல்களை பயன்படுத்தி வந்தனர்.இதையடுத்து, 1919 ஜூன், 30ல், கரூர்-திருமாநிலையூர் பகுதிகளை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்ட, அப்போதைய சென்னை மகாணத்தின் திவான் பகதுாராக இருந்த, ராஜாஜி பணிகளை தொடங்கி வைத்தார். பிறகு, உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கடந்த, 1924 ஜூன், 20ல் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் விஸ்கவுன்ட் கோஷின் திறந்து வைத்தார்.அந்த பாலத்தின் வழியாக கரூரில் இருந்து, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில், பழமை வாய்ந்த பாலம் சேதமடைந்த நிலையில், 1996-2001ல், தி.மு.க., ஆட்சியின் போது, அமராவதி ஆற்றின் குறுக்கே, லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இதனால், பழைய பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.பிறகு, 2001-2006ல், அ.தி.மு.க., ஆட்சியின்போது, புதிய பாலத்தின் ஒரு பகுதி, அமராவதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் சரிந்தது. இதனால், பழைய பாலத்தின் வழியாக மீண்டும், கனரக வாகனங்கள் இயக்கப்பட்டன. புதிய பாலத்தில், பராமரிப்பு பணிகள் நடந்த பிறகு, பழைய பாலத்தில், மீண்டும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமராவதி ஆற்றின் உயர்மட்ட பாலத்தில் கடந்த, 2021ல், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முயற்சியால், தனியார் வங்கி பங்களிப்புடன் நடைபாதை, பூங்கா அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தற்போது, பொதுமக்கள் பழைய அமராவதி ஆற்றுப்பாலத்தில், நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமராவதி ஆற்றின் பழைய பாலத்தின் துாண்கள், சேதமடைந்த நிலையில் உள்ளது. பாலத்தின் பக்கவாட்டு சுவரில் செடி, கொடி முளைத்துள்ளதால், சிமென்ட் பூச்சுகள் உதிர தொடங்கியுள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.எனவே, கரூர் நகரின் அடையாளமாக உள்ள, 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு, கம்பீரமாக காட்சியளிக்கும் பாலத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை