வேப்பனஹள்ளியில் இரு யானைகளைவிரட்ட முடியாமல் வனத்துறை திணறல்
வேப்பனஹள்ளியில் இரு யானைகளைவிரட்ட முடியாமல் வனத்துறை திணறல்கிருஷ்ணகிரி:வேப்பனஹள்ளி சுற்றுவட்டார பகுதியில், கடந்த ஒன்றரை மாதங்களாக முகாமிட்டிருக்கும், இரு யானைகளை விரட்ட முடியாமல், வனத்துறையினர் திணறி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் கடந்த, ஒன்றரை மாதங்களாக கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து பிரிந்து வந்த, இரு யானைகள் முகாமிட்டுள்ளன.இவை இரவு நேரங்களில் வனப்பகுதிகளிலிருந்து வெளியேறி கொங்கனப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி, கே.கொத்துார், தோட்டகணவாய், பன்ரேவ், நேரலகிரி, சிகரலப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து, அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, மா, கேழ்வரகு, காய்கறிகளை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த, 10 நாட்களுக்கு முன் கொங்கனப்பள்ளி, தோட்டகணவாய் கிராமத்திலுள்ள நிலங்களில் அறுவடைக்கு தயாரான பயிர்களை நாசம் செய்த இரு யானைகளும், நேற்று முன்தினம் இரவு சிகரமாகனப்பள்ளி, கே.கொத்துார் உள்ளிட்ட பகுதிகளில் பயிர்களை வேட்டையாடி சென்றன.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வேப்பனஹள்ளி பகுதியில், இரு யானைகள் அட்டகாசம் குறித்து வனத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு கடந்த ஒரு மாதமாக புகார் அளித்து வருகிறோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை, 100 ஏக்கர் அளவில் விவசாய பயிர்கள் முற்றிலும் நாசமாகி உள்ளன. மாலை நேரங்களில் வனத்துறையினர் சிலர் வந்து, பட்டாசு வெடித்து யானைகளை விரட்டுவது போல் பாசாங்கு செய்கின்றனர். ஆனால் நள்ளிரவில், அதே பகுதியில் யானைகள் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை தின்று நாசமாக்குகின்றன. இரு யானைகளையும், கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் சாலையில் அமர்ந்து போராடுவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு கூறினர்.