தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்ரூ.9.88 லட்சம் விதைகள் விற்பனைக்கு தடை
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்ரூ.9.88 லட்சம் விதைகள் விற்பனைக்கு தடைகிருஷ்ணகிரி:தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 9.88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விதைகள் விற்பனை செய்ய தடைவிதித்துள்ளதாக, தர்மபுரி மண்டல, விதை ஆய்வு துணை இயக்குனர் மணி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:விவசாயிகளுக்கு தரமான காய்கறி, பழப்பயிர்களின் விதைகள் மற்றும் இதர பயிர்களின் விதைகள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய, மாநிலம் முழுவதும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலுார் விதை ஆய்வு துணை இயக்குனர் தலைமையிலான விதை ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செயல்படும் வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள், தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் அரசு விதைப்பண்ணைகளில், 2 நாட்கள் ஆய்வு செய்தனர். அப்போது, 54 விதை விற்பனை நிலையங்களில், 119 விதை மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.மேலும் சிறப்பு குழு ஆய்வு செய்தபோது, விற்பனைக்கு இருப்பு வைத்த, விதை குவியல்களின் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள் தனியார் ரக விதைகளுக்கான பதிவுச்சான்றுகள், விதைப்பகுப்பாய்வு முடிவு அறிக்கைகள், இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை ரசீது ஆகியவைகள், விதை சட்டப்படி பராமரிக்கப்படுவது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தனியார் விதை விற்பனை நிலையங்களில், 16 விதை குவியல்களில் மேற்படி உரிய ஆணவங்கள் பராமரிக்கப்படாததால், 9.88 லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறி விதைகள் மற்றும் இதர விதைகள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.