4 நாட்களுக்கு பிறகு கே.ஆர்.பி.,அணைக்கு நீர்வரத்து துவக்கம்
4 நாட்களுக்கு பிறகு கே.ஆர்.பி.,அணைக்கு நீர்வரத்து துவக்கம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையாலும், நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.அணை கட்டியதிலிருந்து முதல் முறையாக கடந்த, 2020 மே 1ல், நீர்வரத்து இன்றி அணை வறண்டது. பின்னர் நீர்வரத்து துவங்கி தண்ணீர் தேக்கினாலும், அணையில், 50 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டு வந்தது. அதன்படி கடந்த ஆண்டு அக்., 9ல், அணை நீர்மட்டம், 50 அடியை எட்டியது. அன்று முதல் அணைக்கு தொடர்ந்து சீரான நீர்வரத்து இருந்ததால் கடந்த, 8 வரை தொடர்ந்து, 150 நாட்களாக அணையில், 50 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. கடந்த, 9ல் அணைக்கு நீர்வரத்து, 117 கன அடியாக குறைந்த நிலையில், 10ல் நீர்வரத்து முற்றிலும் நின்றது. கடந்த இரு நாட்களுக்கு முன் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் நான்கு நாட்களுக்கு பிறகு நேற்று, 54 கன அடியாக நீர்வரத்து துவங்கியது. அணையில் இருந்து பாசனத்திற்கு கால்வாயில், 171 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 49.25 அடியாக இருந்தது.