6 மாதங்களில் பிடிபட்ட 313 கனிமவள கடத்தல் வாகனங்கள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான மணல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட எஸ்.பி., தங்கதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளத்தனமாக வாகனங்களில், கனிமங்களை ஏற்றிச்செல்வதை தடுக்க, வருவாய்த்துறை, கனிம வளத்துறை மற்றும் போலீசாரால் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த மே மாதம், 49, வாகனங்களும், ஜூனில், 38 வாகனங்களும் கைப்பற்றப்பட்டு, உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, கனிமவளத்துறை மூலம், 19 வாகனங்கள், ஓசூர் சப்-கலெக்டர் மூலம், 8, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., மூலம், 7, தாசில்தார்கள் மூலம் கிருஷ்ணகிரி, 6, பர்கூர், 7, போச்சம்பள்ளி, 8, தேன்கனிக்கோட்டை, 8, சூளகிரி, 11, ஊத்தங்கரை, 4, ஓசூர், 4, அஞ்செட்டி, 4 மற்றும் போலீசார் மூலம், 1 என கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும், 87 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த, 6 மாதங்களில், 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.'' என்றார்.