கார்பன் வெளியீட்டை குறைக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சி
கிருஷ்ணகிரி, கார்பன் வெளியீட்டை குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில், கார்பன் வெளியீட்டை குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, ஒரு நாள் பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. தமிழக அரசின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, குடிசை தொழில்கள், சிறு நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் உள்பட, 50 பேர் பங்கேற்றனர். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க முன்னாள் தலைவர் ஏகம்பவாணன், கிரானைட் சிறு தொழில்கள் சங்க தலைவர் மகேஷ், தென்னை நார் தொகுதி தலைவர் விஜயகுமார் ஆகி யோர் தலைமை வகித்தனர். பயிற்சியில், ஆரோவில் ஆலோசகர் சந்தோஷ் வேலு, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு காலநிலை மாற்றத்தின் காரணங்கள், தொழில் துறைக்கு ஏற்படும் அபாயங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து விளக்கினார். மேலும், சுய மதிப்பீட்டு முறை மூலம் தங்கள் வணிகத்தை பாதிக்கும் காரணிகளையும், தங்கள் நிறுவனங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் விளக்கம் அளித்தார். காலநிலை மாற்ற ஆபத்து, மதிப்பீட்டு கருவிகள் மற்றும் தகவமைப்பு மூலம், தீர்வுகள் கண்டறிய உதவும் உத்திகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கூரை சூரிய சக்தி விதிமுறைகள் மற்றும் கூரை சூரிய சக்தி வணிக மாதிரிகளின் நிதி ஈர்ப்பு குறித்து விரிவாக விளக்கினர். மேலும், தங்கள் உற்பத்தி அலகுகளில் சூரிய சக்தி பேனல்களை நிறுவுவது குறித்து விவாதித்தனர். பசுமை தோழர் சாய்விக்னேஷ் நன்றி கூறினார்.