உரிய இழப்பீடு வழங்காத வனத்துறையை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்
தேன்கனிக்கோட்வன விலங்குகளால் சேதமான பயிர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்காத வனத்துறையை கண்டித்து, தேன்கனிக்கோட்டையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ராயக்கோட்டை வனச்சரகங்களை ஒட்டிய கிராமங்களில், யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகளால், ராகி, நிலக்கடலை, பீன்ஸ், நெல், காலிபிளவர், தக்காளி, முட்டைகோஸ் போன்ற பல்வேறு விவசாய பயிர்கள் தினமும் சேதமாகின்றன. ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், சேதமாகும் பயிர்களுக்கு அதிகபட்சம், 7,000 ரூபாய் வரை மட்டுமே வனத்துறை இழப்பீடு வழங்குகிறது.அதையும், தாமதமாக வனத்துறையினர் வழங்கி வருவதை கண்டித்தும், காட்டுப்பன்றியை வன விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்கக்கோரியும், ஏக்கருக்கு பயிர் இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும், தேன்கனிக்கோட்டை வனத்துறை மற்றும் தாலுகா அலுவலகம் முன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி தலைமையில், நேற்று காலை, 11:00 மணி முதல், விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேன்கனிக்கோட்டை தாசில்தார் கங்கை, டி.எஸ்.பி., ஆனந்தராஜ், வனச்சரகர் விஜயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் மனு வழங்கியதுடன், தீர்வு காணாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி கலைந்து சென்றனர்.