ஓசூர் மாநகராட்சி கமிஷனரிடம் அரசு பள்ளி மேலாண்மை குழு மனு
ஓசூர், அக். 16-ஓசூர், காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி (தமிழ், ஆங்கில வழி) தலைமையாசிரியர் பத்மாவதி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி மாலினி மற்றும் உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் மோசின்தாஜ், இந்திராணி, தேவி மாதேஷ் ஆகியோர், மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்தை நேற்று சந்தித்து பேசினர். அப்போது, பள்ளியில் நடக்கும் வகுப்பறை கட்டுமான பணிகள் தொய்வாக நடப்பதால், 350 மாணவ, மாணவியரின் கற்றல், கற்பித்தல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டுமான பணியை விரைந்து முடித்து தர வேண்டும். மாணவர்கள் அமர இருக்கைகள் வழங்க வேண்டும். ஒரு ஸ்மார்ட் கிளாசிற்கு மின் இணைப்பு சரியாக இல்லாததால், பயன்படுத்த முடியவில்லை. அதை சரிசெய்து தர வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் பேவர் பிளாக் அமைத்து, கூரை அமைத்து கொடுத்தால், மதிய உணவு அருந்தவும், இறை வணக்க கூட்டத்திற்கும் பயன்படுத்தி கொள்வோம். குடிநீர் வசதிக்காக போர்வெல் அல்லது தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும். கூடுதலாக, 3 துாய்மை பணியாளர்களை வழங்க வேண்டும் எனக்கூறி மனு வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட கமிஷனர் ஸ்ரீகாந்த், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜிடமும் மனு வழங்கப்பட்டது.