நாய் கடிக்கு சிகிச்சை பெறாத பட்டதாரி வாலிபர் உயிரிழப்பு
ஓசூர்:நாய் கடிக்கு உரிய சிகிச்சை பெறாத பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த குப்பட்டி பஞ்., தின்னுாரை சேர்ந்தவர் எட்வின் பிரியன், 23; எம்.பி.ஏ., பட்டதாரி. இவர், தளி அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஒரு மாதத்திற்கு முன் அவரை நாய் கடித்துள்ளது. அவர் நாய் கடிக்கான சிகிச்சை பெறவில்லை.நேற்று முன்தினம் மதியம் முதல், அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி எச்சில் துப்பியவாறும், திடீரென சத்தம் எழுப்பியவாறும் இருந்துள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை, கக்கதாசத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை நாய் கடித்துள்ளதையும், சிகிச்சை பெறாததால், ரேபிஸ் நோய் தாக்கியுள்ளதையும் கண்டறிந்தனர்.உடனடியாக அவரை, தளி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு நாய் கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேல் சிகிச்சைக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நள்ளிரவில் எட்வின் பிரியன் இறந்தார். அவரது உறவினர்கள், அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவ பணியாளர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. தளி போலீசார் விசாரிக்கின்றனர்.