காதலுக்கு இடையூறு: கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள்
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி பாபு. இவரது மனைவி சுதா, 41. இவருக்கும், பேரிகை அடுத்த பி.சிங்கிரிப்பள்ளியை சேர்ந்த வெங்கடாஜலபதிக்கும், 35, முறையற்ற தொடர்பு ஏற்பட்டது. இதனால், பாபு - சுதா தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.தங்கள் காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதாக சுதா கூறியதால், வெங்கடாஜலபதி, தன் நண்பர்களான ஆஞ்சப்பா, முனியப்பன், 35, சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து, கடந்த 2013 ஜூன் 13 அதிகாலை 3:00 மணிக்கு வீட்டில் துாங்கி கொண்டிருந்த பாபுவின் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்தனர்.மறுநாள் காலை, கணவர் பாபு மாரடைப்பால் இறந்ததாக சுதா அழுது புலம்பினார். ஆனால், ஓசூரிலுள்ள பாபுவின் தம்பி மஞ்சுநாத் வந்து பார்த்தபோது, பாபுவின் கழுத்தில் காயங்கள் இருப்பதை கண்டு, பேரிகை போலீசில் புகாரளித்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுதா, அவரது காதலன் வெங்கடாஜலபதி, அவரின் கூட்டாளிகள் மூவரும் சேர்ந்து, பாபுவை கொலை செய்தது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த காலத்தில் ஆஞ்சப்பா, சீனிவாசன் இறந்து விட்டனர். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.தீர்ப்பில், சுதா, வெங்கடாஜலபதி, முனியப்பன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா ஆஜரானார்.