கார் மீது லாரி மோதல் கர்நாடகா எஸ்.ஐ., பலி
ஓசூர், கர்நாடகா மாநிலத்தில், கார் மீது லாரி மோதியதில், அம்மாநில போலீஸ் எஸ்.ஐ., பலியானார்.கர்நாடகா மாநிலம், கனகபுரா போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தவர் மகபூப் குட்டள்ளி, 35. கடந்த, 24ம் தேதி, கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை தேடி, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு சென்று, இருவரை கைது செய்து, காரில் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். சூர்யா சிட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் காருடன் நின்றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி, கார் மீது மோதியது. இதில், எஸ்.ஐ., மகபூப் குட்டள்ளி படுகாயமடைந்த நிலையில், காரிலிருந்த, 2 கஞ்சா குற்றவாளிகள் தப்பினர். பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.ஐ., நேற்று முன்தினம் உயிரிழந்தார். விபத்து குறித்த, 'சிசிடிவி' காட்சி வைரலானது. இந்நிலையில், விபத்து எதிர்பாராமல் நடந்தததா அல்லது திட்டமிட்டு நடந்த சம்பவமா என, சூர்யா சிட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.