உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு ‍கோரிக்கை

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு ‍கோரிக்கை

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், நேற்று உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகே துவங்கிய உழவர் தின பேரணி, நகரின் முக்கிய சாலை வழியாக சென்று, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன், அனுமந்தராஜ், வண்ணப்பா, பெருமா, கண்ணையா, வேலு, வரதராஜன், சத்தியமூர்த்தி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென் இந்திய விவசாய சங்கத்தின் தலைவர் நரசிம்மம் நாயுடு, கர்நாடக விவசாய சங்க தலைவர் கரும்பூர் சாந்தகுமார் ஆகியோர் பேசினர். இதில், நாடு முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை எவ்வித நிபந்தனையுமின்றி, மத்திய அரசு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஒகேனக்கல் ஆற்றில் வீணாக செல்லும் உபரிநீரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு பெரிய மின் மோட்டார் மூலம் நீரேற்றி, விவசாயத்திற்கு வழங்க வேண்டும். ஆந்திராவில், 'மா' விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்குவது போல், தமிழகத்திலும், 'மா' விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகள் தேசிய வங்கியில் பெற்ற கடன்களை மத்திய அரசும், கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்களை, தமிழக அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை