கோரிக்கை மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கிட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், அகசிப்பள்ளி பஞ்., மக்களுக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கலந்து கொண்டு, துறை வாரியாக அரங்குகள் அமைத்து, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் ஆய்வு செய்து கூறுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 6 இடங்களில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், பல்வேறு குறைகள் தொடர்பாக மனுக்களை மக்கள் அளிக்கின்றனர். அவற்றில் பெரும்பாலானவை, 45 நாட்களில் நிறைவேற்றப்படும். தீர்த்து வைக்க முடியாத பிரச்னைகள் உள்ள சில மனுக்கள் சற்று காலதாமதம் ஆகலாம். ஆனால் அவற்றிற்கும் உரிய தீர்வு அளிக்கப்படும்,'' என்றார்.கிருஷ்ணகிரி பி.டி.ஓ.,க்கள் உமாசங்கர், சிவபிரகாசம், துணை பி.டி.ஓ., ராஜூ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.* அச்செட்டிப்பள்ளி பஞ்., ஊடேதுர்க்கம், நாகமங்கலம் பஞ்., புக்கசாகரம், தோரிப்பள்ளி பஞ்.,களில் நடந்த முகாமை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், தி.மு.க., மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.