உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குப்பையை எரிப்பதால் புகை மண்டலம்

குப்பையை எரிப்பதால் புகை மண்டலம்

கிருஷ்ணகிரி, சமத்துவபுரம் அருகே குப்பை எரிப்பதை தடுக்கவில்லை எனில், சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரம் மற்றும் அருந்ததியர் காலனி பகுதியில் படேதலாவ் ஏரி கால்வாய் செல்கிறது. இதன் அருகே சிலர் முட்டை அட்டை பேக்டரி கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளை கொண்டு வந்து எரிப்பதால், இப்பகுதியில் எப்போது பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதற்கு அருகே, ஸ்வர்ண காலபைரவர் கோவிலும் அமைந்துள்ளது. எப்போதும் கழிவுகளை எரிப்பதால், புகை மூட்டம் காணப்படுவதோடு, கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இரவில் இப்பகுதி மக்கள் நிம்மதியாக துாங்க முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். சுவாசம் அடைக்கும் அளவிற்கு புகை மூட்டம் உள்ளதால், வயதானவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இங்கு கொட்டும் குப்பை அருகே உள்ள படேதலாவ் கால்வாயிலும் நிரம்புகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வது தடை படுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதைக் கண்டித்து, விரைவில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை