ரூ.30,000 லஞ்சம் வாங்கிய முத்திரை ஆய்வாளர் கைது
ஓசூர்:ஓசூரில், 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, முத்திரை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி சாலையில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை முத்திரை ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்த நாகராஜன், 60, முத்திரை பணியாளராக வேலை செய்கிறார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன், 50, முத்திரை ஆய்வாளராக உள்ளார். வரும், 30ல் நாகராஜன் ஓய்வு பெற உள்ளார்.அதற்காக, ஓய்வு கால பண பலன்களுக்கான பட்டியலை தயார் செய்து வழங்குமாறு, முத்திரை ஆய்வாளர் தமிழ்செல்வனிடம் கேட்டார். அதற்கு அவர், 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். நாகராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுறுத்தல்படி, நாகராஜன், 30,000 ரூபாயை தமிழ்செல்வனிடம் வழங்கியபோது, தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், தமிழ்செல்வனை கையும், களவுமாக கைது செய்தனர்.