உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூட்டுறவுத்துறை மூலம் நேரடியாக செங்கரும்பு கொள்முதல்; விவசாயிகள் எதிர்பார்ப்பு

கூட்டுறவுத்துறை மூலம் நேரடியாக செங்கரும்பு கொள்முதல்; விவசாயிகள் எதிர்பார்ப்பு

மதுரை : பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் செங்கரும்பை கூட்டுறவுத்துறையில் இருந்து நேரடியாக விவசாயிகளிடம் வாங்க வேண்டும். இதை அரசாணையாக வேளாண் பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட்டு இடைத்தரகர்களின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டுமென மதுரை மாவட்ட செங்கரும்பு, வாழை, தென்னை விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.சங்கத்தலைவர் பொன்னம்பல வாசு கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் மொத்தம் 5000 ஏக்கரில் கரும்பு சாகுபடியாகிறது. இந்த மண்ணுக்குரிய ரசாயன குணங்களின் காரணமாக இனிப்புத்தன்மை அதிகமாக உள்ளதால் 2023 ஆகஸ்டில் புவிசார் குறியீடுக்கு விண்ணப்பித்துள்ளோம். நபார்டு வங்கியின் மதுரையில் உள்ள மாபிப் எனப்படும் 'அக்ரி பிசினஸ் இன்குபேஷன் போரம்' அமைப்பு எங்களது கோரிக்கையை ஏற்று புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்தது. இரண்டாண்டுகளாகியும் எங்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கவில்லை. புவிசார் குறியீடு கிடைத்து விட்டால் விவசாயிகளிடம் நேரடியாக செங்கரும்புகளை கொள்முதல் செய்வதற்கும் ஏற்றுமதிக்கும் வாய்ப்புள்ளது. விலை நிர்ணயிக்கும் உரிமை கிடைப்பதால் விவசாயிகள் நேரடியாக பயன்பெற முடியும்.இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக இடைத்தரகர்கள் மூலம் கூட்டுறவுத்துறைக்கு மதுரை மாவட்டம் மேலுார் தாலுகாவில் மட்டும் ரூ.10 கோடிக்கு கரும்பு விற்கப்பட்டது. மற்ற விளைபொருட்களை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தேசிய மின்னணு சந்தை (இ - நாம்) மூலம் அதிகாரிகள் விற்றுத் தருவதால் நியாயமான விலை கிடைக்கிறது. அதேபோல கூட்டுறவுத்துறை மூலம் கரும்புகளை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். விவசாயிகளுக்கான வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் இதை வலியுறுத்துகிறோம். அதிகாரிகள் அரசுக்கு தெரிவித்து வேளாண் பட்ஜெட்டில் அரசாணை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ