உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெயில் மேலாண்மை வேண்டும்

வெயில் மேலாண்மை வேண்டும்

மதுரை: அதிக வெப்பத்தால் தோட்டக்கலை பயிர்களின் வளர்ச்சியும் மகசூலும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் வெயில் மேலாண்மை செய்வது அவசியம் என தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா தெரிவித்தார். அவர் கூறியதாவது: வெயில் தாக்கம் அதிகமாக உள்ள மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை விவசாயிகள் வயல் வேலைகளை தவிர்க்க வேண்டும். கொத்தவரை, வெண்டை, பூசணி மற்றும் கொடிவகை காய்கறிகளை பயிரிடுவதன் மூலம் வறட்சியில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம். காலை, மாலையில் நீர் பாய்ச்சினால் பயிர்களுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கும். அல்லது சொட்டு நீர்ப்பாசன முறையை கடைபிடிக்கலாம். வைக்கோல், உலர்ந்த இலைகளை நிலத்தின் மேல் பரப்பி மண் ஈரப்பதத்தை பாதுகாக்கலாம். 35 சதவீதம் முதல் 50 சதவீத நிழல் வலையை பயன்படுத்தி நேரடி சூரியஒளியை குறைத்து பயிர்களை பாதுகாக்கலாம். வயல் எல்லைகளில் மரங்கள் அல்லது புல் வகைகள் நடுவதன் மூலம் சூடான காற்றின் தாக்கத்தை குறைக்கமுடியும். சரியான அளவில் உரங்கள் வழங்கினால் தாவரங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் பெறும். இலைவழியாக நுண்ணுாட்டச் சத்துக்கள் தெளிப்பது பயன்தரும். கோடையில் செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகளை தவிர்க்க வேண்டும். பொட்டாசையம் நைட்ரேட் ஒரு சதவீதம் என்ற அளவில் பயிர்களில் தெளிப்பதன் மூலம் இலைகளில் நீர் ஆவியாதலை தடுத்து பயிர்களை பாதுகாக்கலாம். மேலும் பி.பி.எப்.எம்., தொழில்நுட்பம் என்பது விவசாயத்தில் பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகரிக்கப் பயன்படும் ஒரு நுண்ணுயிரி. இதனை பயிர்களின் இலைகள் மீது தெளித்தால் வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிக்கிறது. மேலும் பச்சையம் அதிகரித்து, ஒளிச்சேர்க்கை திறன் மேம்படுவதால் தாவர வளர்ச்சி சீராக நடந்து மகசூல் அதிகரிக்கிறது. இந்த நுண்ணுயிரியினை மதுரை வேளாண்மை கல்லுாரியில் வாங்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை