தடைகள், அவமானங்களை தாண்டி வருவதுதான் அரசியல் : விஜயைக்கு விஜயபிரபாகரன் அட்வைஸ்
அவனியாபுரம்: '' பல தடைகள், அவமானங்களை தாண்டி வருவது தான் அரசியல். மக்களுக்கு நல்லது செய்வதற்காகதான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்'' என தே.மு.தி.க., விருதுநகர் வேட்பாளராக போட்டியிட்ட விஜயபிரபாகரன் தெரிவித்தார். மதுரைஅயன் பாப்பாக்குடி அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் மிகப்பெரிய சினிமா நட்சத்திரம். ஆனால் அரசியல் என்று பார்க்கும்போது தே.மு.தி.க., 20 ஆண்டு கட்சி. விஜய் அரசியலில் அவரது கொள்கை மற்றும் மக்களின் வரவேற்பை பொறுத்துதான் அடுத்த கட்ட நடவடிக்கையை சொல்ல முடியும். இன்னும் அவர் மாநாடு நடத்தவில்லை. கட்சியை முழுமையாக துவங்கவில்லை. அதன் பிறகு அவற்றை பேசுவோம்.விஜய் எங்களுடன் கூட்டணி வைப்பதற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஆரம்பித்துள்ளார். அவர் கட்சியை முழுமையாக தொடங்கிய பிறகுதான் எந்த கூட்டணிக்கு செல்கிறார் என்பது தெரியும். நான் மூன்று நாட்களாக தொடர் சுற்றுப் பயணத்தில் உள்ளேன். 'கோட்' படம் பார்க்க முடியவில்லை. அப்படத்தில் அப்பா வரும் காட்சிகளை சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு அனுப்பி வைக்கிறார்கள். தியேட்டரில் மக்கள் அந்த காட்சிகளை கொண்டாடும் விதத்தை பார்க்கும் போது புல்லரிக்கிறது. பல தடைகள், அவமானங்களை கடந்து தான் தே.மு.தி.க., கொடி இன்று பறக்கிறது. எங்களுக்கும் எத்தனையோ பிரச்னைகள் வந்தன. எங்கள் கல்யாண மண்டபத்தை இடித்தார்கள், வருமானவரி சோதனை நடத்தினார்கள். மதுராந்தகத்தில் எங்கள் சொந்த இடத்தில் சோலார் பேனல் வைத்தார்கள். இதுபோல பல பிரச்னைகள் வந்தன. இதையெல்லாம் தாண்டி வருவது தான் அரசியல். இதெல்லாம் விஜயைக்கு தெரியும் என்றார்.