தி.மு.க.,வினருக்கு முன்ஜாமின்
மதுரை: தஞ்சாவூரில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெண்களை அவதுாறாக பேசியதாக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது தஞ்சாவூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். விசாரணைக்காக அவரை சென்னையிலிருந்து தஞ்சாவூர் அழைத்து வந்தனர். இதை கண்டித்து அங்கு தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்றனர். உதயநிதியை கண்டித்து த.வெ.க.,வினர் போராட்டம் நடத்தினர். அவர்களை ஆபாசமாக பேசி, தாக்கியதாக தி.மு.க., நிர்வாகிகள் ராமநாதன் உள்ளிட்ட சிலர் மீது தஞ்சாவூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிந்தனர். ராமநாதன், நீலகண்டன் உள்ளிட்ட 13 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி கே.முரளிசங்கர் முன்ஜாமின் அனுமதித்தார்.