உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உதயகுமார் உட்பட 380 பேர் கைது திருமங்கலம் அருகே கல்குவாரி பிரச்னையில்

உதயகுமார் உட்பட 380 பேர் கைது திருமங்கலம் அருகே கல்குவாரி பிரச்னையில்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் போராடிய கிராமத்தினர் 380 பேரை போலீசார் கைது செய்தனர். திருமால் கிராமத்தில் தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் கற்கள், கிராவல் மண் கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விதிமீறி கல்குவாரிகளில் வெடிவைத்து தகர்ப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மண், துகள்கள், துாசிகளால் முதியோர், குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் குவாரி அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதியினர் 9 நாட்களாக போராடி வருகின்றனர். இப்பிரச்னையில் விவசாய விளைநிலங்களும் பாதிப்பதாகக் கூறி தொகுதி எம்.எல்.ஏ.,வும், சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான உதயகுமார் தலைமையில் நேற்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டனர். ஐந்து லாரிகள், 2 வேன்களில் கறுப்புக் கொடிகள், கண்டன பதாகைகளை ஏந்திச் சென்றனர். லாரிகளில் திரண்டு வந்த அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பே, அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். பின் நடந்து சென்ற பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன் ரோட்டில் அமர்ந்தனர். அவர்கள் வருகையால் கலெக்டர் அலுவலக கேட் இழுத்துப் பூட்டப்பட்டது. அங்கே அமர்ந்து, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டைகளை கலெக்டரிடம் திரும்ப ஒப்படைப்பதாக கோஷம் எழுப்பினர். இதில் 4 பெண்கள் மயங்கினர். அவர்களை ஆம்புலன்ஸ்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போராடிக்கொண்டிருந்தவர்களிடம் சமாதான பேச்சு நடத்த டி.ஆர்.ஓ., அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், ஆர்.டி.ஓ., கருணாகரன், தாசில்தார் பாண்டி உட்பட அதிகாரிகள் சென்றனர். அவர்களிடம் தாங்கள் அனைவரும் கலெக்டரை சந்தித்து பேச அனுமதி கேட்டனர். அதிகாரிகள் 10 பேரை மட்டும் அனுமதிப்பதாக தெரிவித்தனர். பொதுமக்கள் மறுத்ததால் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் அவர்களை கைது செய்வதாக போலீசார் தெரிவித்து, 5 வேன்களில் பாதுகாப்பாக அழைத்துச் சென்று அருகில் உள்ள பூங்கா முருகன் கோயில் மண்டபத்தில் வைத்தனர். உதயகுமார் கூறுகையில், ''திருமால் கிராமத்தில் கல்குவாரியால் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கு கனிமவளத்தை பாதுகாக்க நடவடிக்கை தேவை. இதுகுறித்து கலெக்டருக்கு கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. என்னை கைது செய்தாலும் தொடர்ந்து போராடுவேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை