டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி ரூ.68.17 லட்சம் மோசடி 6 பேர் கைது
மதுரை: மதுரையைச் சேர்ந்தவரின் மனைவியை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்ததாகக்கூறி மிரட்டி ரூ.68.17 லட்சம் மோசடி செய்த 6 பேர் கைதாகினர். மதுரையைச் சேர்ந்த ஒருவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், 'மும்பை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுகிறேன். என் பெயர் விஜய் கண்ணா' என அறிமுகப்படுத்திக்கொண்டார். பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை கூறி உறுதி செய்து கொண்டவர், 'உங்கள் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி ரூ.பல கோடிக்கு பணபரிவர்த்தனை நடந்துள்ளது. உங்கள் மனைவி மீது வழக்குப்பதிவு செய்து 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்துள்ளோம். வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும். மனைவி வங்கி கணக்கில் உள்ள ரூ.68.17 லட்சத்தை உடனே அனுப்ப வேண்டும்' என மிரட்டியதால் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அனுப்பியுள்ளார். அதன்பிறகு விஜய்கண்ணா தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்து விசாரித்தபோது தான் மோசடி செய்யப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து மதுரை எஸ்.பி., அரவிந்திடம் புகார் தெரிவித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக நீலகிரி மாவட்டம் கூடலுார் மரப்பாலம் சுதீஷ் என்ற உமர்பாரூக் 28, பந்தலுார் முகமது ரியாஷ் 29, கேரளா மலப்புரம் வள்ளக்கடவு பைசல் ஹெ க் என்ற பாபு 49, அப்துல் கபூர் 43, முகமது சையது 34, முகமது சமீம் 34 ,ஆகியோரை கைது செய்தனர்.