உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீரவசந்தராயர் மண்டப பணி முடியாமல் கும்பாபிஷேகம் அறிவிக்கலாமா அறநிலையத்துறைக்கு அ.தி.மு.க., கேள்வி

வீரவசந்தராயர் மண்டப பணி முடியாமல் கும்பாபிஷேகம் அறிவிக்கலாமா அறநிலையத்துறைக்கு அ.தி.மு.க., கேள்வி

மதுரை ''கேரளா ஜோதிடர்கள் ஆலோசனைபடி ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அதிகளவில் கோயில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதற்காக மீனாட்சி கோயிலுக்கு ஜனவரியில் கும்பாபிஷேகம் அறிவிக்கப்பட்டுள்ளது' என மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: கோயில்களில் உரிய வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படவில்லை. திருச்செந்துார் கோயில் கூட்டத்தை சரி செய்யாமல் விட்டதால் கூட்ட நெரிசலில் ஒரு உயிர் பலியானது. அதேபோல 2022ல் மதுரை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய சம்பவத்தில் 2 பேர் கூட்ட நெரிசலில் பலியாயினர். கோயில்களில் அதிக நேரம் பக்தர்கள் நிற்கிறார்கள் என்று கேள்வி கேட்டால், துறையின் அமைச்சரோ 'திருப்பதி போறான். 24 மணி நேரம் நிற்கிறான்' என்று மக்களை நோகும்படி பேசினார். பழனிசாமி ஆட்சியில் 2018, 2019ல் துாய்மை இந்திய திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே 2ம் இடத்தில் மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு விருது வழங்கியது. அதேபோல திருப்பதிக்கு நிகராக மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு வழங்கும் திட்டத்தை பழனிசாமி கொண்டு வந்தார். இக்கோயில் வீரவசந்தராயர் மண்டபம் தீப்பற்றி எரிந்தது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இதற்குரிய கற்களை எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு திட்ட பணியில் தொடங்கி வைத்தார். தற்போது இந்த நான்கரை ஆண்டு காலம் அறநிலையத்துறை என்பது ஒரு விளம்பர வெளிச்சத்தில் துறையின் அமைச்சர் நடத்தி வருகிறார். கேரளா ஜோதிடர்கள் ஆலோசனை பேரில் மீண்டும் ஸ்டாலின் முதல்வராக அதிகளவில் கோயில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று அவசர கோலத்தில் பணிகள் சரியாக முடியாமல் கும்பாபிஷேம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கூட வீர வசந்தராயர் மண்டப பணிகள் இன்னும் சரிவர நடைபெறவில்லை. அதை முடிந்த பின்பு தான் கும்பாபிஷேம் செய்ய வேண்டும். ஆனால் ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் என்று அறிவித்துவிட்டார்கள். ஏற்கனவே கோயிலுக்கு வரும் நன்கொடைகள், நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது என்று அரசுக்கு நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. ஆகவே துறையின் அமைச்சர் முதல்வர் குடும்பத்திற்கு சேவை செய்வது ஒருபுறம் இருந்தாலும் மக்கள் எழுப்பி வரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ