மீனாட்சி கோவில், தர்காவுக்கு மதுரையில் குண்டு மிரட்டல்
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று பிரதோஷம் என்பதால், மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக மாக இருந்தது. கும்பாபிஷேக திருப்பணிகளை ஆய்வு செய்ய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலுக்கு வரவிருந்த நிலையில், 'கோவிலில் குண்டுவெடிக்க போகிறது' என, டி.ஜி.பி., அலுவலக இ - மெயிலுக்கு வந்த மிரட்டல் குறித்து மதுரை நகர் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அம்மன், சுவாமி சன்னிதிகள், தங்க கொடிமரம், அன்னதானம் வழங்கும் பகுதி, தெப்பக்குளம், பக்தர்கள் மொபைல் போன் வைக்கும் இடம், கோவிலுக்கு முன் தேங்காய் பழம் விற்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார், 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என, உறுதி செய்தனர். அதன் பின், மாலையில் அமைச்சர் ஆய்வு செய்தார். இதேபோல், திருப்பரங்குன்றம் பள்ளிவாசல், மலை மீதுள்ள தர்காவிலும் வெடிகுண்டு வெடிக்கும் என, இ - மெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.