பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் ஆலோசனை கூட்டம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஊராட்சி வசமுள்ள, நகராட்சிக்கு சொந்தமான சந்தைத் திடலில் உள்ள 7.85 ஏக்கர் நிலம் நகராட்சியிடம் ஒப்படைக்கவும், அவ்விடத்தை நகராட்சியே வளர்ச்சிக்கு பயன்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி, நவீன வசதிகளுடன் தினசரி சந்தை, வணிக வளாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் துாய்மை பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. நகராட்சித் தலைவர் சகுந்தலா, கமிஷனர் அசோக்குமார், வர்த்தக சங்கத்தினர், கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், விரிவாக்க பகுதியில் கடைகள் வைத்துள்ளோர் பங்கேற்றனர்.பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி வியாபாரிகள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையாக இடத்தை நகராட்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். நகரில் வெளியேறும் கழிவுகள், நீர் நிலைகளில் கலப்பதை தடுக்க வேண்டும். நகர் முழுவதும் தேங்கியுள்ள குப்பையை முறையாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.