தினமலர் செய்தியால் கலெக்டர் நடவடிக்கை எரியாத மின்விளக்குகளுக்கு தீர்வு
மதுரை: தினமலர் செய்தியால் மதுரை ரிங்ரோட்டில் சிவகங்கை பிரிவு பகுதியில் நீண்ட காலமாக எரியாத மின்விளக்குகள் ஒளிர்வதற்கு, கலெக்டர் பிரவீன்குமார் நடவடிக்கை மேற்கொண்டார். ரிங்ரோட்டில் சிவகங்கை ரோடு சந்திப்பு ரவுண்டானாவில் மாட்டுத்தாவணிக்கும், சென்னைக்கும், நெல்லைக்கும் நான்கு வழிச்சாலை செல்கிறது. இதில் நீண்ட மேம்பாலமும் அமைந்தள்ளது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மின்விளக்குகள் எரியாததால் இரவில் செல்வோர் அச்சமுடன் செல்வர். விபத்துகளும் நடந்துள்ளது. முக்கியமான இந்தசந்திப்பில் மின்விளக்குகள் எரியாதது குறித்து தினமலர் நாளிதழில் செய்தியும் வெளியானது. சிலநாட்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்தம்புராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் பிரவீன்குமார், இந்தப் பிரச்னையை கையில் எடுத்து நெடுஞ்சாலை, மின்வாரியம்மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். மின்வாரியம், நெடுஞ்சாலை அதிகாரிகளிடையே எல்லை பிரச்னையால் இதுகுறித்து விவாதம் எழுந்தது. உடனே கலெக்டர், சென்னை மின்வாரியம், மதுரை மாநகராட்சி அலுவலர்களிடம் பேசினார். இதையடுத்து பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது. 'மாநகராட்சியினர் அதற்கான செலவை மேற்கொள்ள தயாராக இருப்பதால், மின்வாரியத்தினர் விளக்குகளை எரிய விட வேண்டும்' என உத்தரவிட்டார். இதனால் சிலநாட்களாக மின்விளக்குகள் ஒளிரத்துவங்கின. இதனால் அப்பகுதி மக்கள் கலெக்டர், அதிகாரிகள் மற்றும் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.