உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போராட தயாராகும் வணிகவரித்துறை ஊழியர்கள்

போராட தயாராகும் வணிகவரித்துறை ஊழியர்கள்

மதுரை:இடமாறுதல் உத்தரவு கோரிக்கைக்கு நடவடிக்கை இல்லாததால் வணிகவரித்துறை ஊழியர்கள் போராட முடிவு செய்துள்ளனர்.வணிகவரித்துறையில் 3 ஆண்டுகளுக்கு முன் மாநில அளவில் ஒரே நேரத்தில் உதவியாளர் முதல் துணை மாநில வரிஅலுவலர் வரை 111 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. அப்போது 'பொதுமக்கள் நலன்கருதி' என உத்தரவில் தெரிவித்தனர். இதனை விரும்பாத ஊழியர்கள் 'நிர்வாக நலன் கருதி' இடமாறுதல் என இருக்க வேண்டும் என தெரிவித்தனர். வணிகவரித்துறை அதிகாரிகள் அதனை ஏற்கவில்லை. வணிகவரித்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் இதனை கோரிக்கையாக வைத்தும் நடக்கவில்லை.இதில் மாநில நிர்வாகி ஜெயராஜ ராஜேஸ்வரனுக்கு மட்டும் 'நிர்வாக நலன் கருதி' என மாற்றம் செய்து திருச்சிக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இடமாறுதல் பெற்றவர்களில் பலர் இரண்டரை ஆண்டுகளில் 'செல்வாக்கை' பயன்படுத்தி விரும்பிய மாவட்டங்களுக்கு மீண்டும் இடமாறுதல் பெற்றுச் சென்று விட்டனர்.

சீனியாரிட்டி என்னவானது

இதேபோல சில ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்பின் அவர்களில் பலரும் தாங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாறுதல் பெற்று சென்று விட்டனர். இவை எதிலும் எந்தவித சீனியாரிட்டியையும் கடைபிடிக்க வில்லை என்பது ஊழியர்களின் குற்றச்சாட்டு. இதனால் அரசின் இடமாறுதல் நோக்கமே நிறைவேறாமல் போய்விட்டது.இந்நிலையில் மூன்றாண்டுகள் முடிந்த நிலையில் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மீண்டும் மதுரைக்கு இடமாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தனர். அதற்கு பலனில்லாததால் தலைமைச் செயலாளர், அமைச்சர் என பலதரப்பினரிடமும் வலியுறுத்தினர். அவர்களை நேரில் சந்தித்து இடமாறுதல் வழங்கும்படி மனுக்களை கொடுத்தனர். இதுவரை அதற்கு பதில் எதுவும் இல்லாததால் வணிகவரித்துறை ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இந்நிலையில் அக்., 5, 6 ல் கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு நடக்க உள்ளது. இதில் இப்பிரச்னையை எழுப்ப வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அப்போதும் நடவடிக்கை இல்லையெனில் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். அவர்களின் இம்முடிவுக்கு மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ