மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோபம்
திருப்பரங்குன்றம்: பத்து நாட்களுக்கும் மேலாக தெரு குப்பை அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.திருப்பரங்குன்றத்தில் மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டம் நடந்தது. தலைவர் சுவிதா தலைமை வகித்தார். துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர் பார்த்தசாரதி, நகர் நல அலுவலர் இந்திரா, செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி செயற்பொறியாளர் இந்திராதேவி பங்கேற்றனர்.கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், வாசு, முருகன், விஜயா, முத்துலட்சுமி, தமிழ்ச்செல்வி பேசியதாவது: தெருக்களில் குப்பை கொட்டப்படுகிறது. 10 நாட்களுக்கும் மேலாக அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. ஹார்விபட்டி பகுதியில் சுகாதார சீர்கேட்டால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அம்ரூத் குடிநீர் திட்ட குழாய்களில் பலவற்றில் மூடிகள் இல்லாததாலும், பல இடங்களில் கசிவால் தண்ணீர் வெளியேறி வீணாவதுடன், ரோடுகள் சேதம் அடைகின்றன. இவ்வாறு கூறினர்.அனைத்து வார்டுகளிலும் மழை நீர் கால்வாய் துார்வார முக்கியத்துவம் கொடுப்பது உள்பட 21தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.