உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குண்டாஸ் கைதிகளுக்கு தபால் ஓட்டு பரிந்துரைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

 குண்டாஸ் கைதிகளுக்கு தபால் ஓட்டு பரிந்துரைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரை மத்திய சிறையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் ஆய்வு செய்து, குண்டர் சட்ட கைதிகள் தபால் ஓட்டு செலுத்த விரும்புகின்றனரா என கேட்டறிய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், கம்பம் ஷபானா பானு தாக்கல் செய்த மனு: என் கணவர் முகமது சிராஜுதீன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி, மதுரை மத்திய சிறையில் உள்ளார். சட்டசபை தேர்தலில் தபால் வாயிலாக ஓட்டளிக்க அனுமதிக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால், சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தபால் ஓட்டுரிமையை கணவர் பயன்படுத்த அனுமதிக்க வலியுறுத்தி, தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலருக்கு மனு அனுப்பினேன். விருப்பமுள்ள, தகுதியான அனைத்து கைதிகளுக்கும் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்த வாய்ப்பு வழங்க, சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர் திருவடிக்குமார், 'வழக்கில், தேர்தல் கமிஷனை ஒரு எதிர் மனுதாரராக மனுதாரர் சேர்க்கவில்லை. தண்டனை கைதிகள், 'ரிமாண்ட்' கைதிகளுக்கு தபால் ஓட்டுரிமை அளிக்க முடியாது' என்றார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மதுரை மத்திய சிறையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் ஆய்வு செய்ய வேண்டும். தடுப்புக்காவலில் உள்ள கைதிகள், தபால் ஓட்டு செலுத்த விரும்புகின்றனரா என, கேட்டறிய வேண்டும். அந்த அறிக்கையை சிறை கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ