மேலும் செய்திகள்
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
30-Sep-2025
மதுரை : ''வாக்குறுதிகளை அள்ளி வீசி தமிழக மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க.,'' என, மதுரையில் அமைச்சர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கலாய்த்தார். மதுரை மத்திய தொகுதியிலுள்ள வடக்குமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க.,வினர் நேற்று திண்ணை பிரசாரம் செய்தனர். தலைமை வகித்த செல்லுார் ராஜூ, 'பெண்களிடம் 'தி.மு.க., கொடுத்த 'நீட்' தேர்வு விலக்கு, கல்விக்கடன் ரத்து, மதுவிலக்கு அமலாக்கம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதா' என கேள்வி எழுப்பினார். இக்கேள்விகள் அடங்கிய கட்சிப் படிவத்தையும் வழங்கி பதில்களை எழுதி பெற்றார். பின் அவர் கூறியதாவது: தி.மு.க., தன் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்ய உள்ளது. அக்கட்சி அளித்த 525 வாக்குறுதிகளில் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. மக்களை சந்தித்து பேசியதில் இருந்து அவர்கள் இந்த ஆட்சியில் துன்பத்திலும், துயரத்திலும் தான் உள்ளனர் என தெரிகிறது. சினிமாவில் கதை ஒரு பக்கம், கவர்ச்சி ஒரு பக்கம் இருக்கும். மக்களை ஏமாற்ற தி.மு.க., சினிமாத்தனம் செய்து வாக்குறுதிகளை கொடுக்கிறது. வாக்குறுதிகளை அள்ளி வீசி தி.மு.க., மக்களை ஏமாற்றுகிறது. இதுபோன்ற திறமை தி.மு.க.,வுக்கு கை வந்த கலை. 'நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு அநீதி இழைத்ததே காங்., தான். சிதம்பரம் மனைவி தான் நீட் தேர்வுக்கு உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். 'என் தந்தை அறிவு ஜீவி, என் தந்தை முதல்வர் பதவியேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார்' என தற்போதைய துணைமுதல்வர் உதயநிதி அப்போது பேசினார். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை என முதல்வர் ஸ்டாலின் பெரிய காமெடி செய்கிறார் என்றார்.
செல்லுார் ராஜூவிடம், அ.ம.மு.க., தினகரன், கரூர் சம்பவம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர் பேசாமல் சென்றார். பின், நான் மாடக்குளம் கண்மாய் பிரச்னை குறித்து பேசினால், நீங்கள் (பத்திரிகையாளர்கள்) விஜய்...விஜய்... எனக் கேட்டு என்னை ஓட்டி விட்டீர்கள் என கலகலப்பூட்டும் வகையில் பதிலளித்தார்.
30-Sep-2025