குற்றம் செய்வோருக்கு துணை போகும் தி.மு.க., செல்லுார் ராஜூ குற்றச்சாட்டு
மதுரை :''ரவுடிகள், குற்றம் செய்பவர்களுக்கு துணை போகும் கட்சி தி.மு.க.,'' என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார். அவர் கூறியதாவது: தி.மு.க., என்றாலே ரவுடியிசம், கட்டப் பஞ்சாயத்து, வசூல் செய்வது. அதில் மதுரை மாநகராட்சி முன்மாதிரியாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் பசுமை மாநகராட்சியாக மதுரையை தேர்வு செய்த நிலையில் தற்போது குப்பை மாநகராட்சியாக உள்ளது. இன்று வரை மண்டலத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மேயர் கணவரை கட்சியில் இருந்து நீக்கினர். ஜெயிலுக்கு போனவர் வெளியில் வந்த நிலையில் தி.மு.க., கவுன்சிலர்கள், நிர்வாகிகள் வரவேற்கின்றனர். ரவுடிகளுக்கு, குற்றம் செய்கிறவர்களுக்கு துணை போகிற கட்சி தி.மு.க.,. மாநகராட்சி முழுவதும் தி.மு.க., கவுன்சிலர்களின் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆளுங்கட்சியை சேர்ந்தவர் கவுன்சிலரானால் உதவி செய்வார் என நினைத்து மக்கள் ஓட்டு போட்டால் உபத்திரவம் செய்கின்றனர். தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய தி.மு.க., தலைவர் உத்தரவிட வேண்டும். மண்டலத் தலைவர்கள் இல்லாமல் நிர்வாகம் நடக்கத்தானே செய்கிறது. கவுன்சிலர்களுக்கு துளிர்விட்டு போச்சு. கமிஷனர் முன்பே குடியிருப்பு வாசிகளிடம் மூர்க்கத்தனமாக பேசுகின்றனர். அமைச்சர் மூர்த்தியின் தைரியத்தில் இவ்வாறு செய்கின்றனர், என்றார்.