கோடை பயிர்களில் வறட்சி மேலாண்மை
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதிகளில் கோடை பயிர்களில் வறட்சி மேலாண்மை மேற்கொள்வது குறித்து வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:வறட்சியில் இருந்து பயிர்களை காத்திட நெல் விதைகளை விதைக்கும் முன் ஒரு சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் நிழலில் உலர்த்தி விதைக்கலாம். சோள விதைகளை இரண்டு சதவீதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் 6 மணி நேரம் ஊறவத்து விதைக்கலாம். சோளத்தட்டை, கரும்புத்தட்டை வைக்கோல் போன்றவற்றை கொண்டு பயிர் இடைவெளிகளில் மூடுவதன் மூலம் மண்ணில் உள்ள ஈரம் ஆவியாவதை தடுக்கலாம். சைகோசெல் 1000 பி.பி.எம். அதாவது ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். களிமண் வகையை சேர்ந்த கயோலினைட் என்ற பொருளை மூன்று சதவீதம் என்ற அளவில் தெளிக்கலாம். அல்லது பொட்டாசியம் குளோரைடு ஒரு சதவீத கரைசலை தெளிப்பதன் மூலம் பயிர்களை வறட்சியில் இருந்து ஓரளவு காக்க முடியும். பி.பி.எப்.எம். என்ற மெதிலோ பாக்டீரியம் வகை திரவ நுண்ணுயிர் வளர் சிதை மாற்ற வினை மூலம் பயிருக்கு வறட்சி தாங்கும் திறனை அதிகரிக்கிறது. ஒரு லிட்டர் நீருக்கு 10 முதல் 20 மில்லி என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். அல்லது காலை, மாலையில் இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம் என தெரிவித்தார்.