மூன்று ஆண்டுகளாக சாகுபடி செய்ய முடியவில்லை; தண்ணீர் தேங்குவதால் விவசாயிகள் குமுறல்
திருப்பரங்குன்றம் : ''நிலையூர் கால்வாயில் செல்லும் தண்ணீர் வயல்களில் ஊற்றாக கசிந்து தேங்கி நிற்பதால் மூன்று ஆண்டுகளாக நெல் நடவு செய்ய முடியவில்லை'' என குன்றத்து விவசாயிகள் குமுறலை வெளிப்படுத்தினர். வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கால்வாய் மூலம் சென்று திருப்பரங்குன்றம் கண்மாய்களை நிரப்பும்.இந்தாண்டு மழை நீரால் குன்றத்து கண்மாய்கள் நிரம்பிய நிலையில், தற்போது நிலையூர் கால்வாய் வழியாக கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாயில் பல மாதம் தண்ணீர் செல்கிறது. நிலையூர் கால்வாய் பகுதியில் சிறிய கண்மாய்களான செவ்வந்திகுளம், ஆரியங்குளம், குறுகட்டான், நெடுங்குளம், பெருங்குடி கண்மாய்களுக்கு பத்துமுதல் 15 நாட்கள் தண்ணீர் திறந்தாலே நிரம்பி விடும். இந்நிலையில் 3 ஆண்டுகளாக கம்பிக்குடி நீட்டிப்புக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது. நிலையூர் கால்வாயில் பாணாங்குளம் முதல் பெருங்குடி வரை கால்வாய் கரை மணலால் உள்ளது. இதனால் தண்ணீர் கசிந்து வயல்வெளியில் ஊற்றாக கொப்பளித்து தேங்கி நிற்கிறது. ஏற்கனவே செவ்வந்திகுளம், ஆரியங்குளம், குறுகட்டான், நெடுங்குளம் கண்மாய்கள் நிரம்பியுள்ளதால் தண்ணீர் பூமிக்குள் செல்லாமல் தேங்கியுள்ளது. இந்நிலை தொடர்வதால் 200க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்களில் நெல் நடவு செய்ய முடியவில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வு கேள்விக் குறியாகி வருகிறது. எனவே, நிலையூர் கால்வாயில் பெருங்குடி கண்மாய் வரை தரைப்பகுதி, இருபுறம் கரைகளில் கான்கிரீட் சுவர் அமைத்தால் தண்ணீர் கசிவு ஏற்படாது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறினர்.