பாலம் கட்டுவதால் பாசன திறப்பு தாமதம் முன்கூட்டியே திறக்க விவசாயிகள் கோரிக்கை
மதுரை: வாடிப்பட்டி பி.மேட்டுப்பட்டி அருகே பெரியாறு பிரதான கால்வாய் குறுக்கே பாலம் கட்டும் பணி நடந்துள்ளதால் பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக சாகுபடியின் முதல்போகத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் 47ஆயிரத்து 500 ஏக்கர் பாசனத்திற்காக ஜூன் 6ல் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீர்வளத்துறை வளாகத்தில் பாசன சங்கத் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. செயற்பொறியாளர்கள் பாரதிதாசன், சிவபிரபாகரன், உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தனர்.தற்போது பேரணையில் இருந்து 33வது கி.மீ.,ல் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் குறுக்கே பி.மேட்டுப்பட்டியில் சில நாட்களுக்கு முன் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாலம் அமைக்கப்பட்டது. பாலம் அமைத்தபின் 'கியூரிங்' செய்வதற்கு 15 நாட்கள் ஆகும் என்பதால் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பேரணை முதல் 33வது கி.மீ., வரையான வாடிப்பட்டி, அலங்காநல்லுார் பகுதி விவசாயிகள் திட்டமிட்டபடி ஜூன் 6 க்குள் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.கள்ளந்திரி விவசாயிகள் ஜூன் 12 ம் தேதி திறக்க வேண்டும் என்றனர். ஒரே நாளில் தண்ணீர் திறக்கும் போது சரியாக இருக்கும் என்பதால் இதுகுறித்து நீர்வளத்துறையினர் கலெக்டர் சங்கீதாவிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். இதையடுத்து ஜூன் 15 முதல் தினமும் 900 கனஅடி தண்ணீர் திறக்க கலெக்டர் உத்தரவிட்டார்.