வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Better dissolve the corrupt Madurai Munivipsl council and let it be under the council of uncorrupt social actvities
மதுரை : மதுரை மாநகராட்சியில் தொடர்ந்து மூன்று மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடக்காததால் தங்கள் பதவிக்கு ஆபத்து ஏற்படுமோ என கவுன்சிலர்கள் அச்சத்தில் உள்ளனர். அதேநேரம் 'நான் கவுன்சிலர்...ஆனா இல்லை' என புலம்பி வருகின்றனர். மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கும் மேலான சொத்துவரி முறைகேடு காரணமாக மேயர், 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவி விலகினர். அப்போதைய மேயரான இந்திராணியின் கணவர் பொன்வசந்த் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையை மத்திய குற்றப் பிரிவு போலீசார் 'ஆமை' வேகத்தில் நடத்தி வருகின்றனர். பல மாதங்கள் கடந்தும் குற்றப்பத்திரிகையை கூட தாக்கல் செய்யமுடியவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கிடையே மேயர் இல்லாததால் மூன்று மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடக்கவில்லை. கடைசியாக செப்.,25 ல் விவாதக் கூட்டம் நடந்தது. அதையடுத்து மேயர் இந்திராணி ராஜினாமாவை ஏற்பதற்காக அக்.,17 ல் அவசரக் கூட்டம் விவாதமின்றி நடந்தது. அதற்குபின் மேயர் 'பொறுப்பு' வகிக்கும் துணைமேயர் நாகராஜன், மார்க். கம்யூ., சேர்ந்தவர் என்பதால் அவரது தலைமையில் கூட்டம் நடத்த ஆளுங்கட்சி விரும்பவில்லை. புதிய மேயர் தேர்வும் இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் உள்ளாட்சி சட்டவிதிகள்படி மூன்று மாமன்றக் கூட்டங்களில் கவுன்சிலர்கள் பங்கேற்காவிட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படுமோ என அவர்கள் கலக்கத்தில் உள்ளனர். மாநகராட்சி தான் கூட்டம் நடத்தவில்லை. கவுன்சிலர் பதவிக்கு ஆபத்து இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்கட்சி தலைவர் சோலைராஜா கூறியதாவது: தமிழகத்தில் 25 மாநகராட்சிகளில் மதுரையில் மட்டும் தான் மேயர், மண்டல தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் இன்றி செயல்படுகிறது. மூன்று மாதங்களாக உதவி கமிஷனர்கள் தலைமையில் நடந்த மண்டல கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் கிடக்கின்றன. மாநிலத்தில் 2வது பெரிய மாநகராட்சிக்கு இந்த நிலையா. செப்டம்பருக்கு பின் மாநகராட்சியில் மக்கள் பிரச்னைகள் குறித்த விவாதம் நடக்கவில்லை. விவாதம் நடந்தால் தான் வார்டுகளில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன, அதற்கு தீர்வு என்ன என்பது குறித்து முடிவு செய்ய முடியும். 3 கூட்டங்களில் கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை என்றால் பதவி பறிபோகும் என்கின்றனர். ஆனால் மூன்று கூட்டங்களை மாநகராட்சியே நடத்தவில்லையென்றால் கவுன்சிலையே கலைத்துவிட வேண்டியது தானே. இதைவிட தி.மு.க.,வுக்கு பெரிய தலைகுனிவு வேறு எதுவும் இல்லை. அ.தி.மு.க., சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது என்றார்.
Better dissolve the corrupt Madurai Munivipsl council and let it be under the council of uncorrupt social actvities