அரசு பள்ளி மானியம்; நிலுவை கேள்விக்குறியாகும் பராமரிப்பு
மதுரை: தமிழகத்தில் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் பள்ளி மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி 100 மாணவர் எண்ணிக்கை 100க்குள் உள்ள பள்ளிக்கு தலா ரூ.25 ஆயிரம், 100 - 250க்குள் ரூ.50 ஆயிரம், 250 - 400க்குள் உள்ள பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், 400க்கு மேல் மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் என வழங்கப்படுகிறது. இந்த மானியம் ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் இரு தவணையாக வழங்கப்படும். 2024 -2025 ஆண்டில் ஆகஸ்ட்டுக்கான தொகை வழங்கப்பட்ட நிலையில், டிசம்பருக்கான மானியம் இதுவரை வழங்கப்படவில்லை.ஆசிரியர்கள் கூறியதாவது:
இந்த மானியம் மூலம் பள்ளி பராமரிப்பு, தேவையான உபகரணங்கள், சிவில் ஒர்க் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். ஆண்டுதோறும் காலம் கடந்து தான் இந்த மானியம் வழங்கப்படுகிறது.டிசம்பர் மானியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. ஆனால் அந்த மானியத்தில் செலவிடப்பட்ட பணிகள் குறித்து ஆண்டுதோறும் மார்ச்சுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடி உள்ளது. இதுபோன்று காலம் கடந்து வழங்கப்படும் நிதியை செலவிடும்போது தணிக்கை தடைகளை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. உரிய நேரத்தில் இந்த மானியம் வழங்கபடாததால் பள்ளி பராமரிப்பு பணிகள் கேள்விக்குறியாகிறது என்றனர்.