தலைமையாசிரியர்களே விழிப்போடு இருங்கள் கல்வி அதிகாரி அறிவுறுத்தல்
மதுரை : மதுரையில் அனைத்து தொடக்க பள்ளிகளிலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வுடன் பின்பற்ற வேண்டும் என டி.இ.ஓ., சிவக்குமார் தெரிவித்தார்.மதுரை தொடக்க கல்வி டி.இ.ஓ.,வாக கொடிமங்கலம் அரசு பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன் கூடுதல் பொறுப்பு வகித்தார். அப்பணியிடத்தில் திருவாதவூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார் பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டார். அவரிடம் பாஸ்கரன் பொறுப்பை ஒப்படைத்தார்.சிவக்குமார் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் அனைத்து தொடக்க பள்ளிகளிலும் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தலைமையாசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் 40க்கும் மேற்பட்ட ஆபத்து கட்டடங்கள் உள்ளன. அவற்றை இடிக்க பொதுப்பணித் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மழை பெய்யும் போது அதுபோன்ற ஆபத்து கட்டடப் பகுதிக்கு மாணவர்களை செல்ல விடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் மின் ஒயர்கள், சுவிட்சுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.