விளையாட்டு போட்டியில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்க சட்டம் உயர்நீதிமன்றம் அவகாசம்
மதுரை : விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோரை தண்டனைக்கு உட்படுத்த புது சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்தது.தென்மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் சிறுமி படித்தார். அவர் கபடி வீராங்கனை தேசிய கபடி போட்டியில் பங்கேற்க தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான மாநில போட்டிக்கு அச்சிறுமி தேர்வானார். வெளியூரில் நடந்த போட்டிக்கு அவரை உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அழைத்துச் சென்றார். தனது உறவினர் வீட்டில் இருவரும் தங்க உடற்கல்வி ஆசிரியர் திட்டமிட்டார்.அதை மாற்றி சிறுமியை ஒரு லாட்ஜிற்கு அழைத்துச் சென்றார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்கு பதிந்தனர். போக்சோ சட்டப்படி உடற்கல்வி ஆசிரியருக்கு கீழமை நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.2024 மார்ச்19 ல் நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: கீழமை நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். அவரது தாய் கூலித் தொழிலாளி. மாணவிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் பெண்களை பாதுகாக்க பாலியல் ரீதியாக துன்புறுத்துவோரை தண்டனைக்கு உட்படுத்த புது சட்டம் இயற்ற தமிழக தலைமைச் செயலர் 6 மாதங்களில் தீர்வு காண வேண்டும்.விளையாட்டுப் போட்டியின் போது பயிற்சியாளர்கள், அமைப்பாளர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதை தடுக்க, மாணவிகளுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்குரிய செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் நேற்று விசாரித்தார்.அரசு தரப்பு வழக்கறிஞர்:மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் மாணவிகளின் பாதுகாப்பு கருதி சில வழிகாட்டுதல்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. சட்டம் இயற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் விவாதிக்க கூட்டம் நடத்த வேண்டியுள்ளது. தலைமைச் செயலரிடம் விபரம் பெற்று தெரிவிக்க அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தார். நீதிபதி ஏப்.21 க்கு ஒத்திவைத்தார்.