உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஆசிரியருக்கு எதிராக வழக்கு அபராதம் விதித்தது ஐகோர்ட்

 ஆசிரியருக்கு எதிராக வழக்கு அபராதம் விதித்தது ஐகோர்ட்

மதுரை: திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தாக்கலான பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. திருச்சி செந்தில்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் நடத்தை, ஊழல் மற்றும் பணி நிபந்தனைகளை மீறியுள்ளார். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், திருச்சி கல்வி மாவட்ட அலுவலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஜெயச் சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஆவணங்களை பரிசீலித்ததில் மனுவில் எவ்வித தகுதியும் இல்லை. பொதுநல வழக்கு என்ற போர்வையில் தாக்கல் செய்த ஒரு அற்பமான ரிட் மனு. இதை மனுதாரரின் வழக்கறிஞரிடம் சுட்டிக்காட்டினோம். ​​அவர் தனது தரப்பு வாதத்தை தொடர வலியுறுத்தினார். அவரது வாதத்திற்கு பிறகும், இது பொதுநலன் சம்பந்தப்பட்டது என்பதை நாங்கள் நம்பவில்லை. மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தோம். உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்த சமயத்தில், மனுதாரரின் வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற அனுமதி கோரினார். வாபஸ் பெற அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை. மனுவை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். தொகையை சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தர விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ